செல்லும் வழி
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார்-622 409 திருமயம் அருகில் புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து துார்வாசபுரம் சாலையில் 2 கி.மீ.,
கோயில் பெருமைகள்
வாசல் முதல் விமான கலசம் வரை அனைத்தும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளிலும் யானைகள் இடம் பெற்றுள்ளன. கருவறை சுவரிலுள்ள துாண்கள், பூதகணங்கள், மேற்கூரைகள் சோழர்கால பாணியில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் மயில்வாகன முருகன் சன்னதி உள்ளது. இவரது சிலை பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலுக்கு வெளியிலுள்ள மாடத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இவரது திருவடியில் முயலகன் இருக்கிறார்.
தொல்லியல் சின்னம்: தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இக்கோயில், தமிழகத்தின் பழங்காலக் கலைச்சின்னமாக திகழ்கிறது. இங்கு பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, மின்இணைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். முருகனின் வாகனமான மயிலுக்கு பதிலாக யானை இருப்பது இதன் பழமையை உணர்த்துவதாகும். சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை இடம்பெற்றுள்ளது. மூலவர் பாலசுப்பிரமணியர் என்னும் பெயருடன், கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நான்கு திருக்கரங்களில், வலது மேற்கையில் திரிசூலம் உள்ளது. வலதுகை அபயஹஸ்தமாக பக்தருக்கு அடைக்கலம் அளிக்கிறது. இடது மேல்கை ஆயுதம் ஏந்தியும், இடதுகை இடுப்பில் ஊன்றிய நிலையிலும் உள்ளது. இரண்டு தோள்களில் குறுக்காக ருத்ராட்சமாலை, காலையில் தண்டையும் உள்ளன. ஆனால், கையில் வேல் இடம் பெறவில்லை.
சிறப்புகள்
வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தமிழகத்தில் எழுந்த முருகனின் முதல் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.இத்தலத்தில் முருகன் சக்தி மிக்கவராக இருப்பதால் கருவறைக்கு நேராக பலகணி என்னும் கல் ஜன்னல் உள்ளது. இதனால், கோயிலின் பக்கவாட்டில் தெற்கு நோக்கி வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலில் நவக்கிரகங்களை குறிக்கும் விதத்தில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இதன் வழியே முருகனை தரிசிக்க கிரகதோஷம் நீங்கும்.