செல்லும் வழி
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்-622 002, புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 5கி.மீ தூரம் சென்று, திருவேங்கைவாசல் விலக்கில் திரும்பி கோயிலுக்குச் செல்ல வேண்டும். பஸ்வசதி அதிகமில்லை. புதுக்கோட்டையில் இருந்து கார், ஆட்டோவில் சென்று வரலாம்.
கோயில் பெருமைகள்
தவக்கோல முருகன்: கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது, ஒரு காலை மடித்து மறு காலை நீட்டி அமர்ந்து, தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும்.
சுவாமி எதிரே கணபதி: எங்குமில்லாத சிறப்பாக சிவனின் மூலஸ்தானத்திற்கு எதிரில் அவர் பார்வை படும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.
இங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள்.
மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடப்பதை காண கண்கோடி வேண்டும். இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.
எதிரெதிர் சன்னதி: இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.
சிறப்புகள்
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை
மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. யோக தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருவது அபூர்வம்.