அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் கீழ ஏழாம் வீதி, புதுக்கோட்டை.
புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவிலுள்ள இத்தலத்தை ஆட்டோக்களில் அடையலாம்..
புதுக்கோட்டை என்றதும் உங்கள் நினைவிற்கு வருபவள் புவனேஸ்வரி தேவி மட்டுமே. அவள் ஏன் இங்கு வந்தால் தெரியுமா? தன் மகனான ஜட்ஜ் சுவாமிகளை விட்டு பிரிய மனமில்லாமல் இங்கேயே தங்கியிருக்க வந்திருக்க வேண்டும்
ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம் என்றாலும் அன்னை புவனேஸ்வரி இங்கு குடிகொண்டுள்ளதால் புவனேஸ்வரி அம்மன் கோயில் என்று தமிழக மக்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் நேர் எதிரில் ஜட்ஜ் சுவாமியின் அதிஷ்டானம் தென்படும். அவரை பக்தியுடன் வணங்கி இடது புறம் திரும்பினால் அஷ்டதசபுஜா மகாலட்சுமி துர்காதேவி சன்னதி உள்ளது. அம்பிகை மிக உயரமாக பத்து கரங்களுடன் இன்னருள் பாலிக்கிறாள். சற்றே நடந்தால் 18 சித்தர்களை தரிசிக்கலாம். சித்தர்களை அடுத்து நால்வர், 25 தலை கொண்ட சதாசிவர், அபீஷ்ட வரத மகாகணபதி, ஸற்குரு சாந்தானந்த சுவாமிகள், பஞ்சமுக மகா கணபதி, விஸ்வகர்மா, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஐயப்பன். பாலமுருகன், தெட்சிணாமூர்த்தி, தட்சிணகாளி, காசி விஸ்வநாதர், காவல் தெய்வமான பொற்பனை முனீஸ்வரர், கைவல்யானந்த சுவாமி, லட்சுமி நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
ஜட்ஜ் சுவாமிகள் பல்வேறு தலங்களுக்கு சென்றார். கடைசியாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் வந்து தங்கியிருந்தார். இதனிடையே புதுக்கோட்டை கானாம்பேட்டை(பிரம்ம வித்யாபுரம்)யில் வசித்த நரசிம்ம கனபாடிகள், குருஸ்வாமி கனபாடிகள் ஆகியோரின் சகோதரரான கிருஷ்ணமூர்த்தி துறவறம் பூண்டார். அவர் சுவாமியைத் தேடி மானாமதுரை வந்தார். அவரே தனது ஞான வாரிசு என்பதை உணர்ந்த ஜட்ஜ் சுவாமி அவருக்கு சுயம்பிரகாசர் என் தீட்சாநாமம் வழங்கினார். இதன் பின் திருச்சி தாயுமானசுவாமி கோயிலுக்கு வந்தார் சுவாமி. அங்கு வந்ததும் தனது அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தார். புதுக் கோட்டை நோக்கி நடந்தே சென்றார். இங்கிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள நார்த்தாமலை சென்ற அவர், அங்குள்ள சிவன்கோயிலில் நிஷ்டையில் அமர்ந்தார். அவரது நிலையைக் கண்டு பரவசத்தில் மூழ்கினர் பக்தர்கள். அவரது தியானம் கலையாமல் அவரை அப்படியே ஒரு பல்லக்கில் ஏற்றி, புதுக்கோட்டை கொண்டு வந்தனர். அங்கு வந்ததும் சுவாமி இறைவனுடன் ஒன்றினார். புதுக்கோட்டை மன்னரின் திவான் சுவாமியை வணங்கினார். மன்னரின் உத்தரவுபடி நகரின் வடகிழக்கு பகுதியில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.
நவராத்திரி, பவுர்ணமி
அஷ்டதசபுஜா மகாலட்சுமி துர்காதேவி,25 தலை கொண்ட சதாசிவர் இத்தலத்தின் சிறப்பு அம்சங்களாகும்.