செல்லும் வழி
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்
தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில், தஞ்சையில் இருந்து சுமார் 28 கி.மீ, தொலைவில் உள்ளது கந்தர்வகோட்டை. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவு. .
கோயில் பெருமைகள்
இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கேயுள்ள ஸ்ரீஅனுமன், மிகுந்த வரப்பிரசாதி. தொடர்ந்து 11 சனிக்கிழமைகள், இவருக்கு நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து, தயிர்சாதம் அல்லது வடைமாலை சார்த்தி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்று, வளமுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்
புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டமான் மகாராஜா, இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார் என்கின்றன கோயில் கல்வெட்டுகள். அழகிய கோயில். அற்புதமான கோலத்தில் சீதாதேவி லட்சுமணர் சமேதராக கோதண்டராமர். இவரைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.
சைவம் தழைத்தோங்கிய காலம் அது! பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு, செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேர நாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், மன்னருக்குப் பாராட்டு என்று வருகிறபோதெல்லாம், கூத்துக் கட்டி, ஆடிப் பாடுதல் அரங்கேறின. சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அப்படி நடக்கிறபோது, புராணச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே வந்து, இறுதியில் நம் தேசத்து மன்னனும் அந்த குணங்களைக் கொண்டவன்தான் என்று நீதி சொல்கிற, பாராட்டு மழை பொழிகிற விழாக்களும் கேளிக்கைகளும் ஆங்காங்கே நடந்தன. அவற்றில், எந்த மன்னன் ஆட்சி செய்தாலும் நீண்ட நெடிய விளக்கங்களுடன் சொல்லப்படுவது, ராமாயணக் கதையாகத்தான் இருக்கும். ஸ்ரீராமரின் அருமை பெருமைகளையும் சீதாதேவியின் உறுதியான நம்பிக்கையையும் விவரிக்கும்போதே, மொத்த மக்களும் கண்ணீருடன் கேட்பார்கள். சிவனாரின்மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு ஆழகிய கோயிலைக் கட்டினான். கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகளை அமைத்தான். அந்தணர்களுக்கு நிலங்களையும் வீடுகளையும் ஆடு-மாடுகளையும் தானமாகத் தந்தான். கோயிலுக்கு ஏராளமான நிலங்களை எழுதி வைத்து, நித்தியப்படி பூஜைகள் குறையற நடக்க ஏற்பாடுகள் செய்தான். கோதண்டராமர் கோயிலில் வழிபாடுகள் நடக்க நடக்க.. சோழ தேசம் இன்னும் இன்னும் செழித்ததாகச் சொல்வர். கண்டராதித்த மன்னன் கட்டிய கோயிலை இன்றைக்கும் தரிசிக்கலாம்
சிறப்புகள்
சோழர்களால் கட்டப்பட்ட கோயில்.
இக்கோயிலில் ராமநவமி கோலாகலமாக நடைபெறும்.
மாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச்சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு